Tuesday, February 27, 2007

கிரீமிலேயர்

"பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயரை) கண்டுபிடிப்பது கடினமான ஒன்று' என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது, பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய வகுப்பினரை (கிரீமிலேயர் ) அடையாளம் கண்டு அவர்களை நீக்க வேண்டும் என்று மண்டல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வாய்ஸ் அமைப்பு சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.மாத்துர், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,"" கிரீமி லேயரை அடையாளம் காண பல்வேறு நடைமுறைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். கிரீமி லேயரை கண்டு பிடிக்க எளிமையான பார்முலா ஏதும் இல்லை. கிரீமிலேயரை நீக்காமல், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வருவது ஓட்டு வங்கிக்காக தான் என்று மனுதாரர் கூறுவது சரியல்ல. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த வழக்கும், கிரீமி லேயர் அடையாளம் காணுவது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறுவதும் சரியல்ல. கிரீமி லேயர் நீக்கப்படாததால், உண்மையில் இட ஒதுக்கீட்டால் பலன் பெற வேண்டியவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மனுதாரர் சரியான ஆதாரங்களுடன் விளக்கி கூறவில்லை,'' என்று கூறப்பட்டுள்ளது.

0 comments: