Tuesday, October 02, 2007

நேற்றைய போராட்டம் வெற்றியா ? தோல்வியா?

ஒரு பந்த் , போராட்டம் என்று அறிவித்தால் அதன் வெற்றியை எப்படி கணிப்பது?

வேறெப்படி? எத்தனை கடைகள் மூடியிருந்தன / திறந்திருந்தன, எத்தனை பொது போக்குவரத்து சாதனங்கள் ஓடின / ஓடவில்லை, பொதுமக்களை எந்த அளவிற்கு கஷ்டப் படுத்தினோம் / படுத்தவில்லை என்பதை வைத்துத்தான்.

போராட்டத்தை வெற்றி பெற வைக்க என்னென்ன செய்யவேண்டும்?

மிரட்டல் மூலமாகவோ, பயமுறுத்தியோ ,வன்முறையாகவோ கடைகளை அடைக்க வைத்துவிட வேண்டும். அதே பாணியில் பொது போக்குவரத்து ஓடவிடாமல் செய்து விட்டால் பெருவாரியான பொதுசனம் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது அப்படி வந்தாலும் கடைகள் அடைத்திருப்பதால் செய்வதற்கு ஒன்றும் இருக்காது..அப்படியே வந்தாலும் கூட்டமாக நின்று கல்லடித்தால் முடிந்தது கதை ..ஒரு இடத்தில் நடந்தாலும் போதும்..செய்தி பரவிய பின் எந்த ஆண் மகனுக்கும் வெளியே வர தைரியம் வராது..அப்புறமென்ன போராட்டம் அமோக வெற்றிதான்..பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தின் உணர்வுகளை அப்படியே கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார்கள். இதை மறுநாள் பேட்டியில் சொல்லி மார் தட்டிக் கொள்ளலாம்.

நேற்றைய போராட்டமும் இந்த விதிகளுக்கு மாறாமல் அழகாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது...




ஆனால் நடுவில் உச்ச நீதி மன்றம் வந்து குழப்பி விட்டது.கொஞ்சம் விதிகள் மாறி விட்டபடியால் நேற்றைய விளையாட்டும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் தமாஷாகவும் போயிற்று.


சில சாம்பிள்கள் கீழே.


போக்குவரத்துக் கழகங்களைப் பொருத்தவரை தி மு க மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்ந்த சங்கங்கள் பலமுள்லதாக இருப்பதால் பெருவாரியான பஸ்கள் ஓடவில்லை.மீறியும் ஓடிவிடக்கூடாது என்று இரவோடிரவாக டெப்போக்களில் முன்னால் நிற்கும் பஸ்களின் டயர்களில் காற்றை இறக்கி விட்டு எந்த பஸ்ஸுமே எடுக்க முடியாமல் செய்வது , காலையிலேயே கூட்டமாக சென்று டெப்பொக்களிலிருந்து பஸ்களை எடுக்க விடாமல் செய்வது போன்ற அற வழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காலையில் அதிமுக யூனியனை சேர்ந்தவர்கள் பஸ்ஸை ஓட்ட முன் வந்தார்கள்- பொது நல சேவைக்காக அல்ல-எதிர்க் கட்சிப் போராட்டத்தை முறியடிக்கும் ஒரே நோக்கத்தில். ஆனால் அதிகார வர்க்கம் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கும் வேலையை திறம்படவே செய்திருக்கிறார்கள்.பஸ்களை ஓட்டுங்க , ஆனா பஸ்ஸுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தா அதுக்கு டிரைவரும் கண்டக்டரும்தான் பொறுப்பு என்று பொறுப்பாக பதில் சொல்லியிருப்பார்கள்.அப்புறம் எவனாவது பஸ்ஸை எடுப்பான்?

ஆளுங்கட்சியின் நோக்கமே சுப்ரீம் கோர்ட்டே தடுத்தும் , நாங்கள் அறிவிக்காத போதும், பந்த் தானாகவே வெற்றிகரமாக நடந்து மக்களின் ஒட்டு மொத்த உணர்வை பிரதிபலித்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதுதான்.

ஆனால் இவர்களது இந்த எண்ணத்திலும் மண் விழுந்து விட்டது. அதிமுக வேக வேகமாக காய்களை நகர்த்தி, பந்த் என்று சொல்லாவிட்டாலும் பஸ்கள் ஓடவில்லை என்றெல்லாம் வத்தி வைக்க கோபமான உச்ச நீதிமன்றம் "ஏன் ஆட்சியைக் கலைக்கக் கூடாது" என்று ஒரு குண்டத்தூக்கிப் போட, காலையில் பஸ்ஸை ஓட விடாமல் செய்தவர்களுக்கே பஸ்களை ஓடவிட்டு பந்த் எல்லாம் இல்லை என்று காட்டவேண்டிய கட்டாயம்.

ஆனால் இவர்கள் யூனியனே இதைச் செய்தால் கேவலமாயிற்றே அதனால் அதிகாரிகள் அதிமுக யூனியனைச் சேர்ந்தவர்களைப் போய் பஸ்ஸை எடுக்கச் சொல்லி கேட்க அவர்களோ" காலையில் நாங்கள் சொன்ன போது நீங்கள் விடவில்லை, இப்போது நீங்கள் கேட்டு நாங்கள் எதற்கு செய்யவேண்டும்? முடியாது என முரண்டு பிடித்துள்ளனர்.

அப்புறம் எப்படியோ ஒப்பேற்றி சில பஸ்களை போலிஸ் பாதுகாப்புடன் ஓடவிட்டு அதை வீடியோ படம் எடுத்து ஓட்டிவிட்டதற்கான ஆதாரம் சேகரித்துக் கொண்டனர்.ஏனென்றால் நாளைக்கு ஆதாரம் காட்ட வேண்டுமல்லவா? எல்லாம் நார்மல்தான் என்று.


சரி..எது எப்படியோ..பொதுமக்களின் கதியென்னவோ இப்படியாகத்தான் இருந்தது.




இந்த மாதிரியான அரசியல் கோமாளிகளுக்கு ஓட்டுப் போடும் மற்றும் துணை போகும் நமக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

படங்கள்:நன்றி-தினகரன் மற்றும் தினமலர்

"கேக்குற" மாதிரி "காதுல" போட்டு வைக்கக் கூடாதா?

அரசியல் என்றாலே அறிக்கை , பதில் அறிக்கை, சவால், சவாலுக்கு சவால் என்றாகி விட்டாலும் ரொம்ப காமடி பண்ணா சுட்டிக்காட்டாம இருக்க முடியலை.தி மு க தலைமையில் நேற்று நடந்த உண்ணா நிலைப் போராட்டத்தின் போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதிலிருந்து சில துளிகள்(சிவப்பில் கொடுக்கப்பட்டது அவர் மேடையில் சொன்னது)


///ஜெயலலிதாவின் வற்புறுத்தலினால் தி.மு.க., அரசை 89ம் ஆண்டு அப்போதைய பிரதமர் சந்திரசேகர் கலைத்தார். நாம் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு தமிழத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தோம். அவர் ஒன்றும் கலைக்க மாட்டார். ///

ஏற்கனவே ஜனாதிபதியை சரிக்கட்டி வச்சுருக்கோம் அப்படீன்னு சொல்ல வர்ரீங்களா?


////மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் மதிக்கிற தலைவர் கருணாநிதி. அவர்கள் இருக்கும் வரை சுப்ரீம் கோர்ட் என்ன, ஐ.நா., சபை சொன்னாலும் தி.மு.க., ஆட்சியை கலைக்க முடியாது////

இப்படி வாயக்குடுத்து ஏன் நீங்களே மாட்டிக்கிறீங்க? இப்ப ஐ நா சபையை எதுக்கு இழுக்கணும் ?

///அத்வானி ராமேஸ்வரத்திற்கு வரட்டும். அவர்களை நீர்மூழ்கி கப்பலில் அழைத்து செல்கிறோம். அங்கு பாலம் இருந்தால் காட்டட்டும். கப்பல் அங்கு ஓடத் தான் போகிறது. சோனியா, மன்மோகன் சிங் கொடி அசைக்க வரவுள்ளனர். கப்பலில் டி.ஆர்.பாலு மாலுமியாக இருப்பார்///

அந்த இடத்துல தண்ணிக்கு மேல கப்பல் போறதுக்கே ஆழம் பத்தாது.மணல் திட்டா இருக்கு.அங்க கப்பல் போறதுக்கு கால்வாய் வெட்டத்தான் இந்தப் போராட்டமே அப்படீன்னு உங்க " காதுல விழுகுற மாதிரி " யாருமே சொல்லலியா? கப்பலே ஓட முடியாத இடத்தில நீர் மூழ்கிக் கப்பல்ல கூட்டிக்கிட்டு போறேன்றீங்களே.

அது சரி, கப்பலில் டி ஆர் பாலு மாலுமியாக இருப்பார் அப்படீங்குறீங்களே.. அவர் எந்தக் காலேஜில் மரைன் இன்ஜினீரிங் படிச்சார் அப்படீன்னு தலைவர் கேக்க மாட்டாரா? ராமரை மட்டும்தான் கேப்பாரா ?

மேடை கிடச்சு மைக் கிடைச்சு முன்னாடி ஒரு கூட்டமும் பக்கத்துல ஒரு தலைவரும் இருந்துட்டா என்ன வேணா காமடி பண்ணலாம் அப்படீங்குறதை நிறுத்தி என்னைக்கு அறிவு பூர்வமா பேசுவாங்களோ இந்த அரசியல்வாதிங்க.

Monday, October 01, 2007

பாவம் அ மு க...தப்புத் தப்பாய் ஒரு தப்பு

2 நாட்கள்...10 பதிவுகள்...நேற்றும் இன்றும் நடந்த அரசியல் கேலிக்கூத்துகளை ஒட்டி.

அவ்வளவுதான்...யார் யாருடனோ சம்மந்தப் படுத்தி அவர்தான் இவர்... இவர் நடையும் அவர் நடையும் ஒன்றுதான்..இவராகக் கூட இருக்கலாம் என என்னென்னவோ சொல்லி புலம்புகிறார்கள் இந்தப் பதிவில்


இதில் அந்தப் பதிவர் தமிழ் மணத்தினை தூற்றுகிறார், இங்குவந்து தமிழ்மணத்தை உபயோகிக்கிறார் என்று சைகலாஜிகல் அட்டாக் வேறு.


அ மு க வினருக்கு சொல்வதெல்லாம் " நான் நீங்கள் எழுதும் நபர் இல்லை." " இதைச் சொல்லாமல் உங்களனைவரையும் இந்த மாதிரி யூகத்திலேயே வைத்து நல்லா ஏமார்ந்தீர்களா என்று நான் எள்ளி நகையாடலாம்...ஆனால் எனக்கு அதற்கு விருப்பமும் இல்லை...நேரமும் இல்லை."

சரி........ நாங்க ஐபி வச்சு கண்டுபிடிப்போம் அத்தை வச்சு கண்டு பிடிப்போம் அப்பட்டிங்குறதெல்லாம் சும்மாதானா..சரவணன், சரவண குமார் அப்படீன்னு இருந்தா சும்மா நூல் விட்டு பாப்பீங்களா? ஆனைக்கு அர்ரம்னா குதுரைக்கு குர்ரமா ?



இந்த மாதிரி வெட்டி ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விடுத்து என் பதிவு சம்பந்தமாக கருத்து ரீதியாக ஏதேனும் சொல்ல முடிந்தால் ஒருவேளை அது படிப்பவர்களுக்கும் பயனளிக்கக்கூடும் .

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்...வானம் ஏறி

அமைச்சர் டி ஆர் பாலு தலைமையிலான மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப் படாமல் காலதாமதம் ஆகின்றன.

இதனால் செலவுத் தொகையும் கடுமையாக அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு துறையாலும் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்வது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் பணி.இது கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்த கால கட்டத்துக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அதில் கிடைத்த தகவல்கள்

கிழக்கு,மேற்கு& வடக்கு ,தெற்கு இணைப்பு நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியும்,துறை முகங்களை இணைக்கும் சாலைகள் அமைக்கும் பணியும் ஆமை வேகத்தி நகர்கிறது. ,இந்தத் திட்டத்திற்காக ஏற்படுத்தப் பட்ட காலக் கெடு முடிந்த பின்னும் பணிகளின் தாமதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை


ஆந்திராவில் நெடுஞ்சாலை எண் 7 ல் 2003 ஆம் வருடமே ஒப்புதல் வழங்கப்பட்ட அட்லூரு-கால்காலு இடையேயான சாலை 0.5% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது( திட்ட மதிப்பு ரூ 546.15 கோடி)


இது தவிர மஹாராஷ்ட்டிராவில் ஜாம்வத்னார்-தேவ்ஹரி-கோலாபூர் நெடுஞ்சாலை, தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண்7-ல் மதுரை- கன்னியாகுமரி நெடுஞ்சாலைத்திட்டம், நாக்பூர்-ஹைதராபாத் ,பதான்கோட்-போக்பூர் ஆகிய திட்டங்களும் மெத்தனமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு-கிழக்கு இணைப்பு திட்டம்-2 ன் கீழ் மேற்கொள்ளப் பட்டு வரும் 40 நெடுஞ்சாலைத் திட்டங்களுமே காலக் கெடுவைத்தாண்டியும் முடியப் போவதில்லை என்ற நிலைதான் காணப் படுகிறது.

கிழக்கு-மேற்க்கு இணைப்பு திட்டம்-2 ல் செயல்படும் 66 நெடுஞ்சாலைத் திட்டங்களும் இதே கதியில்தான்.


தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு வரும் சாலைப் பணிகளும் 3 ஆண்டுகள் கால தாமதமாகவே நடந்து வருகின்றன.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


வனப் பகுதியில் சாலை அமைப்பதில் அனுமதி பெறுவதில் சிக்கல், நிலம் கையகப் படுத்துவதில் சிக்கல், சில மானிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவற்றால் இந்தத் திட்டங்கள் தாமதமாகின்றன என்று கூறப்படுவதில் உண்மை இருப்பதை நாம் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் நாமக்கு தோன்றும் ஒரு சந்தேகம் - இப்படி ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு நிலுவையில் இருக்கும் பல 1000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த தீவிரமும் காட்டாமல் புதிதாக சேது சமுத்திரத் திட்டத்திற்காய் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதன் பின்னணி மக்கள் நலம் மட்டும் தான?


இதைப் பார்த்ததும் நமக்கு நினைவில் வந்த பழமொழி

"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம்".

பந்த் பற்றி காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டம்

அறிவிக்கப் பட்டிருந்த அவசர கோல "பந்த்" மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கலந்து கொண்டாலும் பந்த் பற்றி அவர்கள் கண்ணோட்டத்தைப் பாருங்கள்


காங்., செய்தி ஊடகத்துறை தலைவர் வீரப்ப மொய்லி, "இது போன்ற போராட்டங்கள் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் நடத்தப்படக் கூடாது. சர்ச்சைக்குரிய தீர்மானம் தொடர்பாக உண்மையான தீர்வு காண்பதற்கு பொறுமை காப்பதே நல்லது. இதுபோன்ற, "பந்த்'கள் வன்முறைக்கு திரும்புவதோடு, வாழ்க்கையின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி "சர்வதேச வன்முறை எதிர்ப்பு தின'மாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துக்கட்சிகளும் இந்த நோக்கத்துடன் இந்த தினத்தை கடைப்பிடிப்பது தான் விரும்பத்தக்கது' என்று கூறியுள்ளார்

என்னதான் கவனத்தை ஈர்க்க அது இது என்று சொன்னாலும் "பந்த்" "எதிர்ப்பு" போன்ற விஷயங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரானதுதான்..இப்போது நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் அதனால் இது தேவையில்லாதது என்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் காங்கிரஸ் மென்று முழுங்குவதைத்தான் இது காட்டுகிறது.

ஏன் ஆட்சியை கலைக்கக் கூடாது?

"பந்த்" கூடாது என்ற தடையுத்தரவை மதிக்காமல் நடந்து கொள்ளும் முதலமைச்சர் மீதும் தலைமைச் செயலர் மீதும் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை ஏன் முன்னெடுக்கக் கூடாது என உச்ச நீதி மன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் கோர்ட் உத்தரவை அமல் படுத்த முடியாத தமிழக அரசை ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது ? கலைத்து விட்டு ஏன் கவர்னர் ஆட்சியை அமல் படுத்தக் கூடாது என மத்திய அரசை கேட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி உன்ணாவிரதப் பந்தலை விட்டு விட்டு அலுவல்களை கவனிக்க கோட்டைக்கு புறப்பட்டு சென்றார் .அமைச்சர்களும் அவரைத் தொடர்ந்து கோட்டைக்கு சென்று விட்டனர் எனத் தெரிகிறது. (இப்படிப்பட்ட சில்லறை காரணங்களுக்காக தேர்தலில் வென்று பிடித்த ஆட்சியை பணயம் வைப்பது மதியீனம்தான்.)


இதனிடையில் தலைமை செயலர் திரிபாதி பஸ் போன்ற பொதுமக்கள் போக்குவரத்து சாதனங்களை உடனடியாக இயக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.அதைத் தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து பஸ் போக்குவரத்தும் அதிகரித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


நாளை உண்ணாவிரதம் / பந்த் .. வெற்றி /தோல்வி, பிசுபிசுத்தது / மகத்தான ஆதரவு என எதிரெதிர் அணிகளின் அறிக்கைப் போர் ஆரம்பமாகி விடும். பத்திரிக்கைகாரர்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்..பொதுமக்களுக்கு ?????

ஆட்டம் தெரியாத நர்த்தகி கூடம் கோணல் என்றாளாம்

எதற்கு என்றே தெரியாமல் அவசர கோலத்தில் ஒரு பந்த்தை அறிவித்து விட்டு அதை உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்ட போது "பந்த்" இல்லை"ஹர்த்தால்" என்கிற கடையடைப்பு ..ஹி..ஹி ...அதுவும் இல்லை "பொதுக்கூட்டம்" என வாரி வழிந்தாகி விட்டது.

இப்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை என்றவுடன் உச்ச நீதிமன்றத்தை தூற்றும் வேலை தொடங்கியாகி விட்டது.

உச்ச நீதி மன்றம் ஏதோ வானத்திலிருந்து பறித்து ஒரு தீர்ர்ப்பை வழங்கவில்லை.

கேரள உயர் நீதி மன்றம் முழு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை மீண்டும் உறுதி செய்து இந்த"பந்தை" தடை செய்திருக்கிறது. இந்தத் தடை ( அதாவது ஏற்கனவே 1998 ல் உறுதி செய்யப் பட்ட தீர்ப்பை) மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனில் உச்ச நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்தான் முடிவு செய்ய வேண்டும் என "தெளிவாகவே" எடுத்துச் சொல்லியுள்ளது. புத்தியுள்ளவர்களுக்கு புரியும்.
இதையெல்லாம் மறைக்கும் முகமாக ஏதோ தமிழ் நாட்டுக்கு எதிராக "வடக்கே உள்ள" உச்ச நீதிமன்றம் சதி செய்வது போல ஓலமிடுவது கேலிக்கூத்துதான்.


முதலில் உச்ச நீதி மன்றம் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை.ஏற்கனவே வேறு மாநிலத்தில்(கவனிக்க வேறு மாநிலத்தில்) நடந்த வழக்கு சம்பந்தமாக 1998-ல் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பை மாற்றமுடியாது என்று குறிப்பிட்டுள்ளது

இரண்டாவது இப்படியெல்லாம் உச்ச நீதி மன்றத்தை குறை கூறிக் கொண்டு திரியும் இவர்களும் தங்களால் கையாலாகாத போது ( காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியார் ) கை காட்டும் இடம் " உச்ச நீதி மன்றம்". அப்போது மட்டும் நீதி கிடைக்க உச்ச நீதி மன்றத்தை நாட இருக்கிறோம் என்று வெத்து அறிக்கையும் கைகேயி கண்ணீரும் உகுத்துக் கொண்டே இதே மனு நிதி சோழனின் கோட்டை வாசலில்தான் சென்று மாடு மாதிரி மணியாட்டுகிறார்கள்.

நெருப்புடன் விளையாடாதீர்கள்-உச்ச நீதி மன்றம் நெத்தியடி

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் இன்று நடக்க இருந்த `பந்த்'க்கு சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது.

மூன்று மணி நேரம் கடுமையான விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பல முறை குறுக்கிட்ட நீதிபதிகள் மிகவும் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

இந்த நாட்டில் இது தான் பிரச்னையாக உள்ளது. இந்த நாட்டில் அனைத்து விஷயங்களையும் இரும்பு கரம் கொண்டு சமாளிக்க வேண்டி உள்ளது. இல்லாவிடில் எந்த வேலையும் நடப்பதில்லை. சட்டசபையோ, நீதித்துறையோ எதுவாக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு தான் சமாளிக்க வேண்டி உள்ளது. பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கேரள ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை 1998ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், இந்த நாட்டில் கோர்ட் உத்தரவுகள் மீறப்படுவது வருத்தத்துக்குரியது. அனைத்து விஷயங்களையும் கோர்ட் தான் கண்காணிக்க வேண்டும், தடுக்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டின் எந்த உத்தரவும் பின்பற்றப்படுவதில்லை என்ற நிலை இருக்கும் போது ஐகோர்ட் உத்தரவுகளை பற்றி என்ன கூற வேண்டி உள்ளது. ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளில் 99 சதவீத உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை. பந்த்துக்கு சுப்ரீம் அக்டோபர் ஒன்றாம் தேதி பந்த் நடக்கவில்லை. `ஹர்த்தால்' என்ற கடையடைப்பு தான் நடக்கிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பந்த் என்று வந்து விட்டால் அரசியல் சட்டத்தின்படி செயல்பட வேண்டிய அனைத்து துறைகளும் ஸ்தம்பித்து விடும். அக்டோபர் ஒன்றாம் தேதி, அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படும் என்று தான் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டம், முதல்வர் தலைமையில் நடந்துள்ளது. எனவே, அக்டோபர் ஒன்றாம் தேதி நடக்க இருப்பது பந்த் அல்ல என்று எப்படி கூற முடியும். அன்றைய தினம் பொது கூட்டம் தான் நடக்கிறது என்ற வாதத்தையும் ஏற்க முடியவில்லை. பொது கூட்டம் எங்கே நடக்கிறது என்பதை காட்டுங்கள். அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது என்று தான் கூட்டணி கட்சிகளின் கூட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வலிமையை காட்ட நீங்கள் நினைக்கிறீர்கள். அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஏன் மூட வேண்டும்? அனைத்தையும் மூடி விட்டால் கூட்டம் நடத்த எங்கு இருந்து மக்கள் வருவார்கள்?தி.மு.க., கூட்டணி கட்சிகள் தங்கள் வலிமையை காட்ட தான் பந்த் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. யாருக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளீர்கள்? சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கு எதிராகவா? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த கோர்ட்டுக்கு எதிராகவா? மக்களுக்கு எவ்வித பாதிப்பும் பந்த் நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது என்ற வாதத்தையும் ஏற்கும்படியாக இல்லை. பந்த் நடத்துவது சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று இந்த கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ பந்த் நடத்த அழைப்பு விடுப்பது குறித்து தான் இந்த கோர்ட் கவலை கொண்டுள்ளது. பந்த் நடந்தால் பொது வாழ்க்கை ஸ்தம்பித்து போய் விடும். அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு( பேச்சு சுதந்திரம்), 21வது பிரிவு( சுதந்திரத்தின் உரிமை) ஆகிய அடிப்படை உரிமைகளை இது மீறும் செயல். சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தற்போது தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த மனு, திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்வது பற்றி அல்ல. பந்த் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதை முடிவு செய்வது பற்றி தான் தற்போது விவாதிக்கப்படுகிறது. பந்த் சட்டவிரோதமானது என ஏற்கனவே இந்த கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அக்டோபர் ஒன்றாம் தேதியோ அல்லது வேறு தினத்திலோ தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பந்த் நடத்த அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு (பந்த் சட்டவிரோதம்) தான் இறுதியானது. அந்த உத்தரவு குறித்து இந்த கோர்ட்டின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும். பந்த்துக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்க முடியாது. அது அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு செய்யும் செயல். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல். இந்த கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அரசு வேறு அர்த்தத்தை தரக் கூடாது. உத்தரவை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

செய்தி சாராம்சம் : தினமலர் :01/10/07
------------------------------------------------------------------------------------------------

"அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் செருப்படி" என்றுதான் தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் அதை நேரடியாக சொல்வது அரசியல் நாகரீகம் இல்லை என்பதால் "நெத்தியடி" என்று போட்டேன். எப்படி அடிச்சாலும் புத்தி வரவா போகுது ??????!!!!!!!!!!

உண்ணாவிரதம்- சில யோசனைகள்

நாளைக்கு எப்படியும் உண்ணாவிரதம் இருக்கப் போரீங்க. யாரை எதுத்து , எதுக்குன்னு தெளிவா தெரியலை. அப்புறம் சனங்க கொழம்பிடக் கூடாதில்லியா..அதுனால பின் வரும் காரணங்கள்ள ஏதாவது ஒண்ணை சொல்லிவிடலாமே

1.காவிரி நீர் பிரச்சினையில் -விரைவில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல் படுத்த அல்லது புதுசா நடுவர் மன்றம் அமைக்க இப்படி ஏதாவது


2.முல்லை பெரியார் அணை பிரச்சினையில் - உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த அல்லது இங்கும் மத்தியிலும் உங்களுக்கு ஜால்ரா தட்டும் இடது சாரிகள் கவனத்தை இந்தப் பிரச்சினையின் பக்கம் திருப்ப


3.இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தை - அமல் படுத்தக் கோரி அல்லது எதிர்த்து ரத்து செய்யக் கோரி


4.மதுரை தினகரன் ஆபிஸில் "குடும்ப சண்டையில் " நடந்த வன்முறையில் எறிந்து சாம்பலான மூன்று அப்பாவிகளின் வழக்கில்- மிக வேகமாக டார்ட்டாயிஸ் வேகத்தில் செயல் படும் சிபிசிஐடி யின் கவனத்தை ஈர்த்து கேஸை உண்மையில் வேகமாக நடத்தி உண்மைக் குற்றவாளியை பாரபட்சமின்றி கைது செய்யச் சொல்லி


இதுல எதுவும் பிடிக்கலையா...சரி என்னமோ பண்ணுங்க போங்க.