Sunday, September 30, 2007

சேது சமுத்திர கால்வாய் திட்டம்...நடக்குமா?

செய்தி : தின மலர்(30/09/07)

சேது சமுத்திர கால்வாய் திட்டம் மேற்கொள்ளப்படும் போது, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது ஒரு புறம் இருக்க, கடுமையான பண நெருக்கடியால் இந்த திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா? என்ற நிலையும் உருவாகியுள்ளது.

யு.டி.ஐ., வங்கி என்று அழைக்கப்பட்டு வந்த ஆக்சிஸ் வங்கி தான், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மேற்கொள்ளத் தேவையான கடன் வசதியை பெற்றுத் தரும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, ஆக்சிஸ் வங்கியின் மூலதன சந்தை பிரிவின் துணைத் தலைவர் அசிஷ்குமார் சிங் கூறியதாவது:

" சேது சமுத்திர கால்வாய் திட்டம் 2004ம் ஆண்டு துவங்கியது. அப்போது ரூ. 2, 427 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை மேற்கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது. இதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வசதியை பெற்றுத் தரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால், தற்போது இந்த திட்டத்தின் செலவு மதிப்பீடு ரூ. 4000 கோடியை தாண்டி விட்டது. கடன் தொகைக்கான வட்டியும் அதிகரித்து விட்டது. கடன் ஒப்பந்தங்களும் காலாவதியாகி விட்டன.

கடலில் கால்வாய் தோண்ட, இந்திய டிரெட்ஜிங் நிறுவனங்களிடம் போதிய கருவிகள் இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இதற்காக வசூலிக்கும் கட்டணம் மிக அதிகம். இதுவும் இந்த திட்டம் பின்னடைய முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இதற்கு மட்டும் ரூ. 3500 கோடி செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் செலவு : முதலில் ரூ. 2,427 கோடி என்ற அளவில் தான் கடன் வசதிக்கு ஏற்பாடு செய்யப் பட்டு, அதற்கு ஏற்றவாறு ஒப்பந் தங்களும் போடப்பட்டன. தற்போது அந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகி விட்டன. எனவே, கூடுதல் கடன் தொகையைப் பெற சேது சமுத்திர திட்ட கார்ப்பரேஷன் ஆலோசனை நடத்தி, புதிய அறிக்கைகளைத் தயாரித்து பார்லிமென்ட் கமிட்டிகளின் ஒப்புதல் பெற்று, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்த பணியைத் துவக்குவது குறித்து கார்ப்பரேஷனிடம் எந்த சலனமும் இல்லை. இந்த கடுமையான பண நெருக்கடியால், சேது சமுத்திர திட்டம் திட்டமிட்டபடி மேற் கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டது. புதிய கடன் தொகையை பெற்றுத் தரும்படி அரசு எங்களை அணுகவில்லை. ஒரு வேளை கடன் தொகையை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டாலும், அந்த கடன் தொகைக்கு அரசு உத்தரவாதம் கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்த திட்டத்துக்கு கடன் கொடுக்க வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன. வட்டி வீதம் அதிகரித்து விட்டது.

அதேபோல, திட்டத்தை முடித்த பின் அதில் இருந்து கிடைக்கும் வருவாயும் துவக்கத் தில் 7.7 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வங்கிகள் தயக்கம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

வங்கிகள் தயக்கம் : முன்பு 2005ம் ஆண்டு இறுதியில் இந்த திட்டத்துக்கு கடன் தொகை பெற வங்கிகளை அணுகிய போது, அவர்கள் காட்டிய ஆர்வம் பாராட்டும்படி இருந்தது. கடன் தொகையையும் எளிதாக பெற முடிந்தது. மொத்த தொகையான ரூ. இரண்டாயிரத்து 427 கோடியில் தூத்துக்குடி, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள், இந்திய டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து ரூ.971 கோடியைத் தருவது, மீதியுள்ள ரூ. ஆயிரத்து 456 கோடியை கடனாக பெறுவது என்று திட்டமிடப்பட்டது. ஆறு வாரங்களாக பேச்சு வார்த்தை நடத்தியதில், டாய்சி வங்கி, அயர்லாந்தில் துப்ளினில் செயல்பட்டு வரும் தீப்பா வங்கி உட்பட 10 வங்கிகள் கடன் தர முன் வந்தன. அரசு உத்தரவாதம் அளிக்க முன் வந்ததால், வங்கிகள் தயக்கம் காட்டவில்லை. தற்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த பண நெருக்கடியைச் சமாளிக்க, விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அசிஷ்குமார் சிங் கூறினார்.

செய்தி : தின மலர்(30/09/07)
__________________________________________________________________

இராமர் மேஸ்திரியா ?அணில் கட்டுச்சா, குரங்கு கட்டுச்சா இதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல நாம கால்வாய் வெட்ட முடியுமா?நம்ம கிட்ட துட்டு இருக்கா? என்னென்ன பலன்கள்..இந்தக் கடன் எப்ப எப்படி தீரும் ? இதையெல்லாம் மொதல்ல சொல்லுங்க.பிராக்டிகலா, உண்மையிலேயே தமிழ் நாட்டுக்கு நல்லது அப்படீன்னா அதை புள்ளி விவரத்தோட மக்களுக்கு சொல்லிட்டா மக்களே இந்தத் திட்டத்துக்கு ஆதரவா நின்னுட்டுப் போராங்க.
அப்பமும் யாராவது "ராமர் பாலம்..சீதை கோலம்" அப்படீன்னு எதிர்த்தால் அப்ப கேக்கலாம் "இராமர் மேஸ்திரியா ? எந்தக் காலேஜு? அணில் கட்டுச்சா?, குரங்கு கட்டுச்சா? " இதெல்லாம்.

அதை விட்டுட்டு சும்மா தமிழனின் 150 வருட கனவு அப்படீன்னு சொல்லி 4000 கோடில எம்புட்டு ஆட்டையப் போடலாம் அப்படீன்னு ஆகாசக் கோட்டை கட்டினா யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

150 வருடத்திற்கு முன்னால் தமிழ"னும்" பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப் பட்டுத்தான் இருந்தான். அப்ப கால்வாய் கனவு கண்டது பிரிட்டிஷ்காரந்தான். அதுவும் அப்பத்திய அவனுடைய நலனுக்காக? ஆனா இன்னைக்கு ?

0 comments: